சூர்யா-சிங்கம்;கார்த்தி-சிறுத்தை.இப்படியே போய்க் கொண்டிருந்தால், சிவகுமார்தான் பாவம். உடன் அவர்களின் சித்தப்பாவான கமலஹாசனும் தான்! இது எந்த உலகப்படம் என்றெல்லாம் மண்டை குழம்பத் தேவையில்லை.நம்ம லோக்கல் தெலுங்கு படம்தான்! ரவிதேஜாகாரு நடித்த "விக்ரமார்க்குடு".
தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும். இறுதியில் தர்மம் வெல்லும். என பத்தாம் வகுப்பு பாடத் தமிழ் புத்தகத்தில் படித்திருப்பீர்களல்லவா..? அம்மாதிரியான மற்றுமொரு கதைதான் சிறுத்தை.
சிறுத்தையில், கார்த்தி ஒரு பக்கா கமர்ஷியல் ஹீரோவாக களமிறங்கியிருக்கிறார். கார்த்திக்கு இப்படத்தில், இரட்டை வேடம். இராக்கெட் ராஜா, இரத்தினவேல் பாண்டியன் என இரு கதாபாத்திரங்கள்.
உங்களுக்கு இத்தாலியின் கரிபால்டியைத் தெரியுமா..? அம்மாதிரியான ஒரு இரும்பு மனிதர்தான் இரத்தினவேல் பாண்டியன்.சாகும் போது மீசையை முறுக்கிக் கொண்டே சாக வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்துடன் பணி செய்து கொண்டிருக்கும் ஒரு அதி நேர்மையான டி.எஸ்.பி. இரண்டு முறை கத்தியானது ஒரு புறம் குத்தி மறுபுறம் வெளிவந்தாலும், ஒரு முறை துப்பாக்கியில் சுட்டும் சாகடிக்க முடியாத ஒரு ஆஜானுபாகுவானவர். காவல்துறையில் நேர்மையாய் இருந்தால், விரோதிகள் இருக்க வேண்டுமே! இங்கும் இருந்து தொலைக்கிறார்கள்
நீங்கள் கடந்த 75 ஆண்டு தமிழ் சினிமா ரசிகரென்றால், இந்நேரம் இன்னொரு கார்த்தியின் கேரக்டரை யூகித்திருக்க வேண்டும். ஆமாம். திருடன் கேரக்டர்தான்! அவருடன் சகதொழிலாளியாக சந்தானம் வருகிறார்.
தமன்னாவுக்கு தமிழ்த் திரையுலகின் சாபக்கேடான லூஸுப் பெண் கதாபாத்திரம். தமன்னா நடித்திருக்கிறாரோ இல்லையோ, அவரது இடுப்பு பயங்கரமாக நடித்திருக்கிறது.பார்ப்பதற்கு(ம்) செம்ம அழகாக, கியூட்டாக இருக்கிறார். எந்த கடையில் அரிசி வாங்குகிறாரோ..! அநியாயத்திற்கு ஒல்லியாக இருக்கிறார். இரண்டு பாடல்களுக்கு பயன்பட்டிருக்கிறார். அதற்கு மேல அவற்றைப் பற்றி விளக்க ஒன்றுமேயில்லை.
திருடன் கார்த்தியும் தமன்னாவும் லவ்விக் கொண்டிருக்கும் போது, ஒரு சிறுமி வந்து கார்த்தியைத் தன் அப்பா என்கிறது. தமன்னா திகைக்க, திருடன் கார்த்தி குழம்புகிறார். சபீனாவோ, விம் பாரோ தேய்த்துப் பார்த்தால், அச்சிறுமியின் அப்பா, இறந்து போன காவலதிகாரி பாண்டியன். (எம்மாம் பெர்ர்ரிய டுவிஸ்ட்டு!) அவர் ஏன் இறந்தார்..? சிறுமி என்ன ஆனார்..? என்பதைத் தெரிந்து கொள்ள திரையரங்கையோ அல்லது திருட்டு டிவிடியையோ நாடுக!
படத்தை காமெடி கலந்து எடுத்துச் சென்ற இயக்குநருக்கு முதலில் ஒரு ஷொட்டு. கார்த்தியையும் தமன்னாவையும் விட படத்தின் தூண் சந்தானம்தான். அவ்வளவுதான் வடிவேலு, விவேக் வகையறாக்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்ட வேண்டியதுதான்! மிக அழகாக ஃபார்ம் ஆகிக் கொண்டிருக்கிறார் சந்தானம். வில்லன் கோஷ்டியுடன் அலப்பறை செய்தல், கார்த்திக்கு கவுண்ட்டர் கொடுத்தல் என அதகளம் செய்திருக்கார் மனிதர்.கிடைக்கும் கேப்களிலெல்லாம் கெடா என்ன யானையையே வெட்டுகிறார்.படத்தை சஞ்சீவி புகழ் ஆஞ்ச நேயர் போல,தன் கையில் தாங்குகிறார் எனலாம்.
சந்தானத்தைத் தவிர பட்த்தில் பாராட்டப்பட வேண்டிய இன்னொருவர் கலை இயக்குநர் இராஜீவன். பல இடங்களில் அசத்தியிருக்கிறார். கார்த்தி தங்கியிருகும் பாழடைந்த திரையரங்கு, ஆந்திர ரயில் நிலையம் என அருமையாக பணி செய்திருக்கிறார். பாடல்களிலும் இவர் பங்கு பளிச்சென தெரிகிறது.
வித்யாசாகருக்கு என்னாச்சு..? பாடல்களில் ஒன்றிரண்டுதான் தேறுகிறது. பின்னணி இசையும் அவ்வளவு மெச்சிக்கொள்ளும் படி இல்லை. அந்த “ஜிந்தாத்தா ஜிந்தா” மட்டும் ஒரே ஒரு ஆறுதல்.
கதைக்களம் ஆந்திரா என்பதால்,பல இடங்களில் தெலுங்கு வாடை அடிக்கிறது. குறிப்பாக, வில்லன் கோஷ்டிகள் மற்றும் போலிஸ் கார்த்தி தன் கைத்துப்பாக்கியை, ஏதோ ரோல் கேப் லோடு செய்த தீபாவளித் துப்பாக்கி போல சுடுவதைப் பார்த்தால், வெண்ணிறஆடை மூர்த்தி ஸ்டைலில் சிரிப்பு ப்ப்பீறிக் கொண்டு வருகிறது. இடைவெளைக்கு முந்திய காட்சியில், "எவனாவது மிஞ்சியிருக்கிறார்களா....?" எனக் கேட்கும் கடமையுணர்ச்சி மயிக் கூச்செறிய வைக்கிறது, ஆனால், திரையரங்கிலும் ஒருவர் கூட மிஞ்சவில்லை என்பது சோகமான விஷயம். அடிக்கடி மீசையை முறுக்கிக் கொண்டு "ப்ப்பாண்டியன்" எனும் போது சத்தியமாக"ம்ம்ம்முடியயல"
கார்த்திக்கு இம்மாதிரியான ஆக்சனை விட, காமெடி அற்புதமாக வருகிறது. அவரது கண்கள் கூட சிரிக்கிறது!
நீங்கள்,லாஜிக போன்ற லாகிரி வஸ்துக்களை மறந்து, ஒன்றரை மணி நேரம் நன்றாக வாய் விட்டு சிரித்து படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவரா..? சிறுத்தை உங்களுக்கான படம்தான்! என்சாய்.
அனைவருக்கும் அகமகிழ்ந்த உழவர் திருநாள் வாழ்த்துகள்!
-- SGR (SHAIJU)